Saturday, April 10, 1999

Vijay's fan club 5th Anniversary - Dinakaran

தினகரன, கடலூர் , பிப்.23- ……


உங்கள் மீது கல்லூரி மாணவிகள் காதல் மயக்கத்தில் இருப்பது ஏன்? என்று ரசிகைகள் கேட்டதற்கு நடிகர் விஜய் பதில் அளித்தார். கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவட்ட விஜய் ரசிகர் நற்பணி மன்ற 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரசிகர், ரசிகைகளும், பொதுமக்களும் நடிகர் விஜயை காண ஆவலுடன் காத்திருந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போலீஸ் துணை சூப்பிரண்டு பன்னீர் செல்வம் தலைமையில் பாது காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கட்லூர் நகர தி.மு.க. கூடுதல் செயலாளர் பி.கணபதி விழாவிற்கு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஆரோக்கியராஜ்பாஸ்கர், ஆர்.ஐயப்பன், ஏ.புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்கள். எஸ்.சீனு வரவேற்றார்.

விழாவில் விஜய் மன்ற அகில இந்திய துணைத்தலைவர் ஏ.ரவிராஜன், மாவட்ட மன்ற ஆலோசகர் ஏ.சசிகுமார், செந்தில், 5 வயது குழந்தை சிந்துகவி, த.மா.கா. மாவட்ட தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், தி.மு.க. தேர்தல் பணி மாநில செயலாளர் இள.புகழேந்தி எம்.எல்.ஏ. உள்பட பலரும் பேசினார்கள்.

நடிகர் விஜய் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாவட்ட மன்ற நிர்வாகிகள் சீனு, ஆரோக்கியராஜ், ஐயப்பன், பாஸ்கர், புருஷோத்தமன், ரவி, முருகன், சசிகுமார், மணிமாறன், ராஜா, கருணாகரன், நாராயணன், ராஜசேகரன், பி.கணபதி எம்.சி. உள்பட பலருக்கும் விஜய் பொன்னாடை போர்த்தி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக பாராட்டினார்.

விழாவில் கடலூர் நகர, ஒன்றிய, மாவட்ட கிளை விஜய் மன்ற நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று வேகமாக வந்து நடிகர் விஜய்க்கு ரோஜா மாலைகளையும், பொன்னாடையும் ஆர்வத்துடன் அணிவித்தார்கள். நடிகர் விஜய் எண்ணற்ற ரசிகர்களுக்கு அந்த மாலைகளை எடுத்து கழுத்தில் போட்டு மகிழ்ந்தார்.


விஜய் பேச்சு

பின்பு நடிகர் விஜய் பேசியதாவது-

முதலில் கடலூர் வாழ் ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதே மேடையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தேன். ஆனால் விழா மேடையில் அதிக நேரம் என்னால் இருக்க முடியவில்லை. அப்போது நடிகர்கள் வெளியூர் போகக்கூடாது என்ற ரூல் சங்கத்தில் இருந்தது. முன்னதாகவே தேதி கொடுத்து விட்டதால் தேதியை மாற்ற மனம் இன்றி, வெளியூர் போகக்கூடாது என்ற எல்லையையும் மீறி வந்தேன். அந்த நிலையில் கடலூரில் அதிக நேரம் இருக்க முடியாமல் சென்றதற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்கள்

நான் நடிகர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என் அப்பா, அம்மா நான் நடிகனாவதை விரும்பவில்லை. என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார்கள். நான் நடிகன் ஆனதால்தான் இத்தனை நண்பர்கள் எனக்கு கிடைத்துள்ளார்கள். அதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். புதுவையில் இருந்து நான் கடலூர் நோக்கி வந்தபோது மாவட்ட எல்லையில் எனது தம்பிகள் என் காருக்கு முன்பு 5 கார்களிலும், பின்னால் 5 கார் களிலும் அணிவகுத்து பெரிய ஊர்வலம் போல் என்னை அழைத்து வந்தார்கள். ஒரு பக்கம் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கலாம்.

குடும்பத்தை கவனியுங்கள

இந்த ஆர்வத்தை என் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தின் வளர்ச்சியில் காட்ட வேண்டும். கல்வியில் காட்ட வேண்டும். உபயோகமான முறையில் செலவிட வேண்டும். ஒரு கார் வந்து எனக்கு வழிகாட்டி இருந்தாலே போதுமானது. வீண் செலவு வேண்டாம். உங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், தொழில் இவைகளை நன்றாக கவனித்து விட்டு பிறகு என் படத்தை பார்க்கலாம். அப்போதுதான் நீங்களும் நன்றாக இருக்கலாம். நானும் நன்றாக இருக்கமுடியும்.

துள்ளாத மனமும் துள்ளும் …

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பெரிய வெற்றிப்படமாக நீங்கள் மாற்றி காட்டிவிட்டீர்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படியே நான் பேசிக்கொண்டுபோனால் போர் அடிக்கும். ஆகவே 10 ரசிகர்கள் இங்கு மேடைக்கு வந்து என்னிடம் கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


ரசிகர்கள் கேள்வி

இதை தொடர்ந்து விழா மேடைக்கு வந்து ரசிகர் - ரசிகைகள் கேட்ட கேள்விகள் விவரம் வருமாறு-

சரஸ்வதி-தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் உங்கள் மீது காதல் மயக்கத்தில் உள்ளது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

விஜய்-காதல் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. அன்பை குறிக்கும். அவர்கள் என்னை அண்ணனாக ரசிக்கலாம் அல்லவா?

சரஸ்வதி- ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் ரசிகைகள் அப்படி இருப்பதாக தெரிய வில்லையே?

விஜய்-வேண்டுமானால் 10 பேர்களில் 2 பேர் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.

மாணவி சந்தியா- லவ் பண்ணும் ரசிகைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விஜய்-என்றும் என் ரசிகையாக இருந்து படிப்பில் முதல் மாணவியாய் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

உதவி செய்வீர்களா?

அனிதா- உதவி என்று கேட்டு வரும் எல்லோருக்கும் உதவி செய்வீர்களா?

விஜய்-என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை எப்போதும் செய்வேன்.

அனிதா- நான் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். சிபாரிசு செய்வீர்களா?

விஜய்-அய்யய்யோ....

அனிதா- சார், உங்கள் திரு மணம் எப்போது?

விஜய்-இந்த வருடம் நடைபெறும். எல்லோரும் வரணும்.

ஏழுமலை- சூப்பர்ஸ்டார் ரஜினியை போல் உங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறhர்களே, எப்படி?

விஜய்-உங்கள் எல்லோருடைய அன்பும், ஆதரவினால் தான் என் அனைத்து படங்களும் வெற்றிப்படமாக அமைகிறது. அதுதான் முக்கிய காரணம்.

அனிதா-உங்கள் தங்கை இறந்த சோகம் உங்களுக்கு இன்னமும் உள்ளதா?

விஜய்-முன்பு இருந்தது. இப்போது இல்லை. இத்தனை பேர் எனக்கு தங்கைகளாக இருக்கிறீர்களே எனக்கு ஏன் சோகம்?

நலத்திட்ட உதவிகள்

பின்னர் கால் ஊனமுற்ற ஒரு இளைஞருக்கு நடிகர் விஜய் 3 சக்கர சைக்கிளை இலவசமாக வழங்கினார். விழிஇழந்தோர் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சீருடைகளையும், ஏழை எளிய, வயதானவர்களுக்கு வேட்டி- சேலைகளையும் வழங்கினார். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பல்லாயிரக்கணக்கான ரசிகர், ரசிகைகள் அவரை நோக்கி முண்டியடித்துக் கொண்டு நெருங்கவே போலீசார் அவரை பாதுகாப்புடன் காரில் வழியனுப்பி வைத்தனர்.