விஜயின் அறிமுகக் காட்சியே விட்டலாச்சார்யா படத்தை விஞ்சுகிறது. புவியீர்ப்பு விசைக்கு சவால் விடுகிறார் ஒவ்வொரு காட்சியிலும். இவர் நடப்பதை விட பறப்பதே அதிகம் என்பதால்தான் குருவி என்று பெயர் வைத்தார்களோ?
அப்பாவுக்கு தரவேண்டிய கடனை வசூலிக்க மலேசியா செல்லும் விஜய் அங்கு செய்யும் சாகசங்கள் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் வியப்புதான். சுமனின் வீட்டிற்குள்ளேயே புகுந்து வைரத்தை கிளப்பிக் கொண்டு தப்பிக்கும் விஜய், ஃபிளைட்டில் ஏறும் வரை ரசிகர்களுக்கு இறங்காது பி.பி. அடுத்த பிளைட்டிலேயே சுமன் சென்னைக்கு வந்திறங்க தீப்பிடிக்கிறது திரை.
இன்னொரு பக்கம் கொண்டா ரெட்டியாக முண்டா தட்டுகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. விஜயின் அப்பா மணிவண்ணனையும், அவருடன் சேர்த்து நூற்றுக்கணக்கான குடும்பங்களையும் கொத்தடிமைகளாக வைத்திருக்கும் இவரது கோஷ்டிகள் செய்யும் அட்டகாசங்கள், பதற வைக்கும் பரிதாபங்கள். மெல்ல இந்த கொத்தடிமை கூட்டத்துக்குள் ஊடுருவும் விஜய், கடப்பா ராஜூவை அடித்து துவைத்து, தூக்கில் தொங்க விடுகிற காட்சிகள் கைதட்டல் ரகம்.
விஜயை தேடி சென்னைக்கு வந்திறங்குகிற த்ரிஷா, தனது பேக்கை தவறவிட்டு தேடுவதும், டர்க்கி டவலுடன் ரிசப்ஷனில் சண்டை போடுவதும் கலகலப்பு. அண்ணன் அடிவாங்கி அரை பிணமாக கிடந்தாலும், அடித்துப்போட்ட காதலனிடம் ஒருவார்த்தை கேட்க வேண்டுமே? நல்ல தங்கச்சிங்கப்பா!
இடைவேளை வரைக்கும்தான் சுமனின் ஆட்டம். அதன்பின் நாற்காலியில் உட்கார்ந்தே நடிக்க வேண்டிய பரிதாபம். லேப்-டாப் மூலமாக குவாரிக்குள் இருக்கும் விஜயை சுமன் அடையாளம் காட்டும் காட்சி த்ரில்+கலகலப்பு. கடைசி ரிலீல் அவர் சக்கர நாற்காலியில் இருந்து ஜம்பென்று எழுந்து சண்டை போடுவது எப்டிங்ணா?
மணிவண்ணன், இளவரசு என்று மனதில் நிற்கிற கேரக்டர்களுக்கு ஜே.
விஜய் படங்களுக்கேயுரிய கும்மாங்குத்து பாடல்கள். அதிலும் “மொழ மொழன்னு யம்மா ய ம்மா பயங்கரம். அர்த்தம் புரியாமலே குழந்தைகளும் பாடுவார்கள். ஹ¨ம்...!
மேன் ஆஃப்த மேட்ச் ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்குதான். ஒவ்வொரு பிரேமும் பிரமிப்பு! நம்ப முடியாமல் அமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள்தான் இப்படத்தின் பலமும், பலவீனமும்.
No comments:
Post a Comment