31.07.08 கவர் ஸ்டோரி |
உற்சாகப் பூரிப்பில் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒரு சுற்று பெருத்து விட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் பற்றியும், இளைய தளபதி பற்றியும் வந்துள்ள ஒரு புதுத் தகவல் அவர்களைப் பூரிப்படைய வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடித்த `குசேலன்' படம், வரும் 31-ம்தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இன்னொரு ரஜினி படம் பற்றிய இனிப்பான செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஊஞ்சலாட வைக்க, இன்னொருபுறம் முதல்முறையாக ரஜினி, விஜய்யுடன் கைகோத்து நடிக்கப் போகிறார் என்ற தகவலால், விஜய் ரசிகர்களும் விண்ணில் மிதக்காத குறை. மலையாளத்தில் மம்மூட்டி_ஷ்ரீனிவாசன் நடித்த `கத பறயும் போழ்' என்ற படம்தான் தமிழில் ரஜினி_பசுபதி காம்பினேஷனில் `குசேலன்' என்ற பெயரில் படமாக வெளிவந்து பட்டையைக் கிளப்ப இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி, விஜய் நடிக்கப்போகும் மற்றொரு படமும் மலையாள ரீமேக் படம்தான் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் இருந்து குதித்து, அவர்களது ரசிகர்களைக் கொண்டாட்டம் போட வைத்திருக்கிறது. அந்த மலையாளப் படத்தின் பெயர் `ஒன் வே டிக்கெட்'. `கத பறயும் போழ்' படம் போலவே இந்த `ஒன் வே டிக்கெட்' படமும் மம்மூட்டி படம்தான். பாபு ஜனார்த்தனன் கதை எழுத, பிபின் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்து கேரளத்தில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ள மற்றொரு முக்கிய நடிகர் பிருதிவிராஜ். `கத பறயும் போழ்' படத்தில் அசோக் ராஜ் என்ற நடிகராக வந்து அசத்திய மம்மூட்டி, இந்த `ஒன் வே டிக்கெட்' படத்தில் அவர் மம்மூட்டியாகவே இருக்க, அவரது ஆப்த ரசிகராக அந்தப் படத்தில் நடித்திருக்கிறார் பிருதிவிராஜ். இந்தப் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகும் படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரத்தில் ரஜினியும், பிருதிவிராஜ் வேடத்தில் இளைய தளபதி விஜய்யும் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இருதரப்பு ரசிகர்களையும் இன்பக் கடலில் மூழ்கடித்துள்ளது. ``இயல்பிலேயே விஜய், ரஜினியின் ரசிகர். அப்படியிருக்க, சூப்பர் ஸ்டாரின் ரசிகராகவே விஜய் இந்தப் படத்தில் நடித்தால் படம் கண்டிப்பாக பட்டையைக் கிளப்பிவிடும் என்பதில் என்ன சந்தேகம்?'' என்கிறார்கள் ரஜினி, விஜய் ரசிகர்கள். ரஜினியும், விஜய்யும் முதன்முதலாக இணைந்து இந்தப் படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பதுடன், இந்தப் படத்தை `பருத்திவீரன்' புகழ் அமீர் இயக்கப் போகிறார் என்பது கூடுதல் செய்தி. `ஒன் வே டிக்கெட்' படத்தின் கதைதான் என்ன? கதையின் நாயகனாக வரும் பிருதிவிராஜ், மெகா ஸ்டார் மம்மூட்டி ரசிகர் மன்றத்தின் மலப்புரம் மாவட்டத் தலைவராக இருக்கிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் வாடகை ஜீப் ஓட்டி தாய் மற்றும் மூன்று சகோதரிகளைக் காப்பாற்றி வருகிறார். பிருதிவிராஜின் மாமா வசதி படைத்தவர். அவரது மகள் சாஜிராவை பிருதிவிராஜ் திருமணம் செய்ய நினைக்கும்போது, மாமா அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடுகிறார். இந்த நிலையில் நண்பனின் திருமணவிழாவில் ரசியா என்ற பெண்ணை பிருதிவிராஜ் சந்திக்க நேர்கிறது. தான் ஏற்கெனவே பார்த்த சுனந்தா என்ற பெண்தான் ரசியா என்று நினைத்து பிருதிவிராஜ் அவளை மணக்க விரும்புகிறார். பிருதிவிராஜின் மாமாவோ, பிருதிவிராஜிடம் எதுவும் சொல்லாமல், ரசியா குடும்பத்தைச் சந்தித்து திருமண வாக்குறுதி கொடுத்து விடுகிறார். திருமண வேளையில் மணப்பெண் சுனந்தா அல்ல, ரசியா என்று தெரிந்ததும் பிருதிவிராஜ் திருமணத்துக்கு மறுத்து விடுகிறார். வேறு வழியில்லாமல் ரசியாவைத் தன் ஒரே மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மாமா. இதற்கிடையே சுனந்தாவுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள். தந்தை இறந்து விட்ட நிலையில், நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசிக்கும் சுனந்தாவை தனது மகனுக்குக் கட்டிவைக்க நினைக்கிறார் வில்லன் திலகன். சுனந்தாவுக்கு திலகன் மாமா முறை என்றாலும் இந்தத் திருமணம் சுனந்தாவுக்குப் பிடிக்கவில்லை. இந்நிலையில், சுனந்தாவை எப்படியாவது கைப்பிடிக்க நினைக்கும் பிருதிவிராஜ், அதற்காக தனது அபிமான நட்சத்திரம் மம்மூட்டியிடம் ஆலோசனை பெற்று, அவரது உதவியோடு சுனந்தாவை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. `ஒன் வே டிக்கெட்' படத்தில் ஒரு மெகா ஸ்டாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயுள்ள ஆழ்ந்த உறவை அழகாகச் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். மம்மூட்டியின் படங்கள் ரிலீஸாகிற போது, பிருதிவிராஜ், நம்மூர் சராசரி ரசிகன் ரேஞ்சுக்கு, தியேட்டர்களில் தோரணங்கள், பேனர்கள் கட்டுவது, தனது ஜீப்பில் மைக் வைத்து விளம்பரம் செய்வது, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, மன்ற நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் போடுவது போன்றவற்றைக் குறைவில்லாமல் செய்கிறார். தனது மாவட்டத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் மம்மூட்டி நடித்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓட, அதன் வெற்றிவிழாவுக்கு மம்மூட்டியை அழைத்து வந்து தூள் கிளப்புகிறார் பிருதிவிராஜ். அடிக்கடி படப்பிடிப்பு செட்களில் மம்மூட்டியைச் சந்தித்து ரசிகர் மன்றம் குறித்தும், சமூக சேவைகள் குறித்தும் ஆலோசனை கேட்கிறார். மக்களுக்குப் பயன்படும் வண்ணம் ரசிகர் மன்றங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் மம்மூட்டி, தனக்குப் பிடித்த ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளையும் ரசிகர் மன்றம் மூலம் உற்சாகப்படுத்துகிறார். இப்படி ஒரு மிகப்பெரிய நடிகருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையே ஊடாடும் உறவை மிக அழகாக இந்தப் படத்தில் சித்திரித்திருக்கிறார்கள். அதோடு காதல், குடும்ப சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் என்ற நாலாவித சுவைகளுக்கும் இந்தப் படத்தில் பஞ்சமில்லை. `ஒன் வே டிக்கெட்' படம் ரஜினி, விஜய் காம்பினேஷனில் தமிழில் வெளிவந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் அது புதுப்புது அத்தியாயங்களை எழுத வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ரஜினி, விஜய் ரசிகர்கள். எப்படி? கடந்த சில ஆண்டுகளாகவே சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்கவோ, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவோ இல்லை. `இந்த நிலையில் இப்படியொரு படம் வெளிவந்தால் ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள உறவு மீண்டும் இறுக்கமாகி உயிர் பெறும், தங்களுக்கும் அது உத்வேகம் தரும் என நம்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினிக்குப் பிறகு சினிமாவுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம் அரசியலில் புகுந்து கலக்கி வரும் நிலையில், அடுத்ததாக விஜய்! ஏற்கெனவே அரசியல் ஆசை வந்து விட்ட விஜய், கொடி அறிமுகப்படலம் ஒன்றை நடத்தி அவரது அரசியல் ஆசைக்கு அச்சாரம் போட்டு விட்டார். விஜய்யை கண்டிப்பாக அரசியல் களத்தில் இறக்கிவிட, அவரது தந்தை சந்திரசேகரும் உறுதியாக இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி வருகிறது. தியேட்டருக்கு வரும் ரஜினியின் படங்களாகட்டும், விஜய்யின் படங்களாகட்டும் வசூலில் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இந்த நிலையில், ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர விஜய்யால் மட்டுமே முடியும் என்று ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்கு, `ஒன் வே டிக்கெட்' படம் கண்டிப்பாக பிள்ளையார் சுழி போடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். ``கூச்ச சுபாவம் உள்ள விஜய்க்கு அரசியல் பலம் சேர்க்க சூப்பர் ஸ்டாரின் தோழமை உதவும். அதே சமயம் சூப்பர் ஸ்டாரும் அரசியல் களமிறங்க அது வாய்ப்பாக அமையும். யார் கண்டது? சூப்பர் ஸ்டாரும், இளைய தளபதியும் இணைந்து ஓர் அரசியல் கட்சியை உருவாக்கினால் கூட அது தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிப்போடும்'' என்கிறார்கள் அவர்கள். ரஜினி, விஜய் நடிக்கப்போகும் புதுப்படத்தை இயக்குவதில் அமீர் மிக ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒகேனக்கல் பிரச்னையில் ரஜினியை ஆதரித்துப் பேசி அவரது மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டவர் அமீர். அதுபோல அமீரின் `பருத்திவீரன்' படத்தை மனம் திறந்து ரஜினி பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியை வைத்து புதுமையான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் அமீருக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. `யோகி' பட வேலைகள் முடிந்த பிறகு, இதற்கான ஆயத்தங்களில் அமீர் இறங்க வாய்ப்பிருக்கிறது'' என்கின்றனர் அவர்கள். என்றாலும் இந்தச் செய்திகளெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படையாக ஏதும் வராததால், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. என்றாலும் ரஜினி _ விஜய் காம்பினேஷனில் `ஒன் வே டிக்கெட்' படம் தமிழில் வெளிவந்தால், அது அரசியலிலும், சினிமாவிலும் புத்தம்புது ஒளியைப் பாய்ச்சிவிடும் என்பது மட்டும் நிஜம். |
Monday, July 28, 2008
Rajini-Vijay in One way ticket?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment