Thursday, November 13, 2008

ரசிகர்கள் ரகளை-விஜய் படப்பிடிப்பு 2 முறை ரத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு மற்றும் தேரிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வில்லு படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் நடந்து வருகிறது.

நேற்று மணப்பாடு சர்ச் ரோட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை அறிந்த ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும், நடிகர் விஜயை பார்க்க அங்கு கூடினர். இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

இதையடுத்து படத்தின் இயக்குநர் பிரபுதேவா அந்த பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மணப்பாடு பாலத்தில் படப்பிடிப்பை நடத்தினார். அங்கும் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மணப்பாட்டை அடுத்த பெரியதாழை பைபாஸ் ரோட்டில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் கார் ஓட்டி கொண்டு வருவது போலவும், அவரை பின் தொடர்ந்து பல கார்கள் வருவது போலவும் படமாக்கப்பட்டது.

இந்த பகுதியிலும் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் படப்பிடிப்பு குழுவினரும், ரசிகர்களிடம் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உங்களை சந்திப்பார் என தெரிவித்தனர். இருந்தும் ரசிகர்கள் விஜயை பார்க்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து பேச முயன்றார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரை ரசிகர்கள் பின்னோக்கி தள்ளினர். இதையடுத்து பாதுகாப்பு நின்ற போலீசார் விஜய்யை பத்திரமாக மீட்டு காருக்கு அனுப்பி வைத்தனர்.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள் போலீஸாருடன் வாக்குவாதம் புரிந்தனர். இப்படியாக வில்லு படப்பிடிப்பில் ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

No comments: