Sunday, July 13, 2008

விஜய்யை இயக்குவது கஷ்டம் - எஸ்.ஏ.சி.

என் மகன் விஜய்யே நடிக்க முன் வந்தாலும் கூட இனி அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது. நான் அவரும் நல்ல நண்பர்களாக இருப்பதையே விரும்புகிறேன், என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
Vijay
இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது பந்தயம் எனும் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் நிதின் சத்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று அம்பிகா எம்பையர் ஓட்டலில் நடந்தது.

ராம.நாராயணன் தலைமையில் நடந்த இவ்விழாவில் படத்தின் டிரெயிலரை விஜய் வெளியிட சிம்ரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், என் தந்தை இந்தக் கதையை என்னிடம்தான் முதலில் கூறினார். எனக்காகவே தயார் செய்து வைத்திருந்த மாதிரி இருந்தது இந்தக் கதை. ஆனால் அவர் என்னிடம் நடிக்கும்படி கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் 6 மாதங்களாவது காத்திருக்க வேண்டி வந்திருக்கும்.

ஆனால் அவ்வளவு நாள் காத்திருக்கும் ரகமில்லை அப்பா. அதனால் நிதின் சத்யாவை வைத்து இயக்கிவிட்டார். இதோ ரிலீசுக்கும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது படம்.

ஒரு விதத்தில் நான் இந்த வாய்ப்பை நிதினுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. அவரது கண்கள் விசேஷமானவை. பல அற்புதமான உணர்வுகளைக் காட்டக் கூடியவை, என்றார்.

அடுத்துப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:

இந்தக் கதையை நான் என் மகன் விஜய்யிடம் கூறியது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. ஒரு நண்பன் என்ற முறையில் அவரது கருத்தை அறியவே சொன்னேன். மற்றபடி, அவரை என் படத்தில், இயக்கத்தில் நடி என்று நான் கேட்கமாட்டேன்.

உண்மையைச் சொல்லணும்னா, விஜய்யை வைத்து இனிமேல் என்னால் படங்கள் இயக்க முடியாது. காரணம் இப்போது அவர் இருக்கும் உயரம் அப்படி. அவர் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகிவிட்டது.

'என் அடுத்த படத்தில் நீ நடிச்சாகணும்பா' என்று நான் சொன்னால் விஜய் ஒன்றும் மறுத்து விடப் போவதில்லை. ஆனால் அது சரியாக வராது. படப்பிடிப்பில் நான் எப்போதும் கறாராகத்தான் இருப்பேன்.

சரியான நேரத்துக்கு வராவிட்டால் கடும் கோபம் வரும் எனக்கு. அவர் லேட்டாக வந்தால் என்னால் கேட்க முடியாமல் போகும். அல்லது கேட்டால் எல்லாமே கெட்டுப் போகும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் அவரை நடிக்குமாறு கேட்பதில்லை நான்.

ஆனாலும் அவரது அடுத்த படத்துக்கு நான் தயாரிப்பாளராக இருக்கிறேன். அதில் பிரச்சினை இருக்காது, என சந்திரசேகர் சொல்லிக் கொண்டே போக, விஜய் சிரிப்பை அடக்கியபடி, போதும்பா என சைகை செய்தார்.

விஜய் படத்தை எஸ்ஏசி இயக்கமாலிருப்பதன் ரகசியம் இதுதானா...!

No comments: