Saturday, May 03, 2008

மூவர் கூட்டணியின் மீண்டுமொரு வெற்றி 'குருவி'

வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.
`குருவி' - விஜய்-த்ரிஷா

விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.

விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.

கோச்சா கதாபாத்திரத்தில் சுமனும், அவருடைய கூட்டாளியான கொண்டரெட்டி பாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர்.
`குருவி' - விஜய்-த்ரிஷா

மலேசியாவில் உள்ள கோச்சாவை ஒழிக்க, இந்தியாவில் இருந்து வெற்றிவேல், ஓப்ஸ் (விவேக்) இருவரும் மலேசியாவிற்கு பறக்கின்றனர்.

கோச்சாவைப் பற்றி தகவல் சேகரிக்க முயலும் வெற்றிவேல், ஒரு கட்டத்தில் சிங்கத்தின் குகைக்கு உள்ளேயே செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கோச்சாவின் வீட்டில் நுழைகிறார்.

கோச்சாவின் தங்கையாக த்ரிஷா. பணக்கார ரவுடிக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான தேவி கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷா இப்படத்திலும் தனது முத்திரையை (கவர்ச்சி... காதல்... நடிப்பு) பதித்துள்ளார்.

கோச்சா குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தேவி மறுக்கிறார். இதையடுத்து வழக்கம் போல் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் காதல் வளர்கிறது (தமிழ் சினிமா கதையை வேறு எப்படியும் நகர்த்த முடியாது போல...)

புத்தாண்டு நெருங்குகிறது... உலகமே புத்தாண்டைக் கொண்டாட கோலகலமாக தயாராகிறது. ஆனால் விஜய்... கோச்சாவை போலீசிடம் வசமாக சிக்க வைக்க ஏதாவது ஒரு முக்கிய ஆதாரம் சிக்காதா எனக் தேடுகிறார்.

புத்தாண்டுக்கு முன்பாகவே கிடைக்கிறது அந்த முக்கிய ஆதாரம். புத்தாண்டு தினத்தன்று வெற்றிவேல், தேவி, ஓப்ஸ் மூவரும் மலேசியாவில் இருந்து புறப்படுகின்றனர்.

விஜய் கையில் சிக்கியது என்ன ஆதாரம்... கோச்சா, கொண்டரெட்டி கும்பல் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்பட்டதா... விஜய் வென்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை. இடையிடையே குருவி - தேவி டூயட் பாடல்களும் செருகப்பட்டுள்ளன.

ஏற்கனவே விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் உருவான `கில்லி' சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதைப் போலவே குருவியிலும் மூவர் முத்திரை தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படத்திலும் கதம்பமான விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் தரணி.

விஜய் கையில் சிக்கிய ஆதாரத்தை கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று கதையை முடித்திருப்பதில் இயக்குனர் தரணி மீண்டும் 'கில்லி'யடித்திருக்கிறார் என்றே கூறலாம்.

காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்‍ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது.

கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்‍ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

No comments: