Monday, May 12, 2008

Kuruvi - Magazine Reviews

கொஞ்சம் காரம். நிறை வீரம். கதைக்குத் தகுந்த மாதிரி குடும்ப பாரம். இந்த மூன்றும் கலந்து வந்திருக்கிறது. குருவி. கில்லியில் சொல்லி அடித்த விஜய் - தரணி கூட்டணி இப்போது குருவியை களத்தில் இறக்கியிருக்கிறது.. இந்த முறை விஜய் ஆந்திர வில்லன்களுடன் மோதுகிறார். பொலிவான முகமும் முறுக்கேறிய உடலுமாய் படம் முழுக்க வலம் வரும் விஜய்யிடம் சூப்பர்கிங் உற்சாகம். எடையைக் குறைச்சுட்டா ச்சும்மா சுறுசுறுன்னு குருவி மாதிரி ஆயிரலாம்னு விஜய்க்குத் தெரிஞ்சிருக்கும் போல.
படம் முழுக்க ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக வருகிறார். வீட்டில் சாவு விழுந்தால் கூட தயங்காமல் டூயட்டைத் தொடர்கிற வழக்கமான ஹீரோயினாக த்ரிஷா. அடுத்தடுத்து வெட்டும் குத்தும் நடந்து கொண்டிருக்கும் வேளைகளிலும் என்னை லவ் பண்றியா? என்று விஜயை அவர் துரத்தும் காட்சிகளில் நமக்கு எரிச்சல்தான் ஏற்படுகிறது. அடிக்கடி விஜய்யின் கையை பிடித்தக் கொண்டு ஒடி கில்லி எ ஃபெக்ட்டைத் தர மட்டுமே பயன்பட்டிருக்கிறார் த்ரிஷா.

ஹீரோ, ஹீரோயின் இப்படியிருக்க கதை மலேசியாவை நோக்கிப் போகிறது. விஜய்யின் அப்பா மணிவண்ணன் கடன் சுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிப்போக குடும்பத்திற்கென்று மீதியான ஒரே சொத்து வீடு. அதையும் அப்பா கொடுத்த செக் பவுண்ஸ் ஆன கடனுக்காக பிடுங்கப்பட இருக்க கெடு வாங்கிக் கொண்டு செக் கொடுத்த மலேசிய கம்பெனிக்கு அப்பாவின் கடனை வசூல் செய்ய குருவியாக பறக்கிறார்கள் விஜய்யும் நண்பர் விவேக்கும். கதை அங்கே சூடு பிடித்திருக்க வேண்டும். ஆனால் குருவிதானே அதிக உயரம் பறக்க இயலவில்லை. ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வில்லன்கள் வந்தாலும், படத்தில் விறுவிறுப்பு மிஸ்ஸிங்.

அதிரடியாய் அறிமுகமாகும் சீனியர் வில்லனான சுமன் பாதிப் படத்திலேயே விஜய் அடித்து வீல் சேரில் உட்கார வைத்து விடுகிறார். எம்.எல்.ஏ. வாக வரும் ஆசிஷ் வித்யார்த்தி அடிமைத் தொழிலாளர்களை வைத்திருப்பதும் நினைத்த மாத்திரத்தில் அவர்களை சுட்டுக் கொல்வதும் போலீஸ் கைத்தடிகள் போல நடத்துவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியமான காட்சிகள். ஏதோ தெலுங்கு படம் மாதிரி போய்ட்டிருக்கே? என்ற நம் சந்தேகத்தை வில்லனகள் அனைவரும் ஆரம்பம் முதல் கடைசி வரை தெலுங்கில் பேசி உறுதிப்படுத்திவிடுகிறார்கள். குவாரியிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முயலும் இளவரசு ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக மனதில் இடம் பிடிக்கிறார்.

சரண்யா, மணிவண்ணன், நாசர் (சிறப்பு தோற்றம்) போன்றோருக்கு நடிக்க வாய்ப்பே இல்லை.

விஜய்-விவேக் கூட்டணியில் வரும் காமெடி காட்சிகள் கோடை வெயிலில் தர்பூசணி சாப்பிடுவது போல் இருக்கின்றன. மேற்கத்திய இசையும் நாட்டுப்புறப்பாட்டும் கலந்து ஒலிக்கும் ஹேப்பி நியூ இயர் பாடல் இசையமைப்பாளர் வித்யாசாகரை தரணிக்கு சூப்பர் ஜோடி என சொல்ல வைக்கிறது. ஆனால் விஜய்யின் அறிமுகப் பாட்டு... விஜய்க்கான குத்து மிஸ்ஸிங்...

கொத்தடிமைத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிரச்னையை நச்சென்று காட்டுவது போல ஒரு காட்சி கூட இல்லாதது திரைக்கதையில் மிகப் பெரிய பலவீனம். முதல் பாதியில் காமெடி கலக்கலாகப் போகும் கதை பின்பாதியில் ரத்த மயமாகிறது. கில்லியின் வேகத்தை தொட்டுவிடவேண்டுமென்று தரணி முயன்றிருக்கிறார். ஆனால் அது தொட இயலாத அசுர வேகம்.

- குமுதம் விமர்சனக் குழு
---------------------------------------------------------------------------
வில்லன்களால் சிறை வைக்கப்பட்ட தந்தையை காக்கும் மகனின் கதை. ஆம்பளையா இருந்தா உன் அப்பனை காப்பாத்துடா என்று சுமன் சவால் விட விறு விறு வேகமெடுக்கும் திரைக்கதையின் முன் பாதி, ஜாலி எக்ஸ்பிரஸ். ஆனால் பின்பாதி சீரியஸ் ஷதாப்தி. காட்சிக்கு காட்சி விஜய்யின் விஸ்வரூப ஆக்ஷன் அட போட வைப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷாலிட்டி. பணம் தர மறுக்கும் மலேசிய வில்லனை அடித்து துவைப்பது முதல் அவர்களின் சமூக விரோதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது வரை அதிரடி இடி....
விஜய்யின் அலப்பறையில் அதிர்கிறது தியேட்டர். மின்வெட்டு நடனம், பன்ஞ் டயலாக்... என இளமை திரையில் தளும்பி தியேட்டருக்குள் தெறிக்கிறது. த்ரிஷாவை விஜய் சந்திப்பது கலகல கவிதை. விஜய்யைத் தேடி திருவல்லிக்கேணி வரும் த்ரிஷாவின் பையில் வைரத்தை வைக்க, பின்னர் நடக்கும் சம்பவங்கள் சந்தோஷ களேபரங்கள்... விவேக் வரும் காமெடி காட்சிகள் சிரிப்புக் களஞ்சியம். தோற்றத்திலும் குரலிலும் கரடு முரடு சேர்த்துக் கலக்கியிருக்கிறார் சுமன். ஆஷிஸ் வித்யார்த்தியின் சவுண்டான நடிப்பில் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார். என்ன தான் கணவன் கெட்டவன் என்றாலும், அவன் அடி வாங்கும் காட்சியில் சரண்யா மகிழ்வது டூ மச். த்ரிஷாவும் அவ்வப்போது நடிக்கிறார்! குதிக்கிறார்.

அனைவரது கைத்தட்டலையும் பெறும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்., இயக்குநருக்கு இணையாக உழைத்திருக்கிறார். அதிரடி இசையில் அசத்தியிருக்கிறார் வித்யாசாகர். "மொழமொன்னு', "பல்லானது' பாடல்கள் இனி மியூசிக் சேனல்களின் செல்லப்பிள்ளை.

- கல்கி விமர்சன குழு
-------------------------------------------------------------------------
தில், தூள், கில்லி' என்று ட்ரிபிள் ஷாட் அடித்த தரணியின் குருவி

வீடு ஏலத்தில் மூழ்காமல் இருக்க காணாமல் போன அப்பாவுக்கு வர வேண்டிய கடனை வசூலிக்க, "குருவி'யாக மலேசியா செல்கிறார் விஜய். கடனை வசூலிக்க முடியாமல், வில்லன் சுமனிடமிருந்து காஸ்ட்லி வைரத்தை லபக்கிக் கொண்டு சென்னை வருகிறார். வைரக் கள்வனிடம் மனதைப் பறிகொடுக்கும் சுமனின் தங்கை த்ரிஷாவும் பின்னாலேயே சென்னை வருகிறார். வைரத்தையும் தங்கையையும் தேடி சுமனும் சென்னைக்கு!
விஜய்யைப் போட்டுப் புரட்டியெடுத்துவிட்டு, அவருடைய அப்பா மணிவண்ணன் தன்னிடம் கொத்தடிமையாக இருக்கும் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார் சுமன். பிறகென்ன... அப்பாவை மீட்பதும் த்ரிஷாவைக் கைபிடிப்பதுமான திசை நோக்கிப் பறக்கிறது குருவி!

விஜய், தரணி, த்ரிஷா கூட்டணி; மதுரைக்குப் பதில் மலேசியா; கபடிக்குப் பதில் கார் ரேஸ் எனப் பழைய பாதைதான்! கொத்தடிமைகள் மீட்பும் வில்லன்களும் மட்டும் புதுசு!

விஜய்க்கு ஆதர்சமான ஆக்ஷன் அவதாரம் பொளேர் பொளேரெனப் பொளக்கிறார். டமால் டுமீலென வெடிக்கிறார். ஆகாயத்தில் பறக்கிறார். தண்ணீருக்குள் தடதடக்கிறார் என ஆக்ஷன் பேக்கேஜ்! கிடைத்த கேப்களில் காமெடி. சென்டிமென்ட் வகையறாக்களுக்கும் மரியாதை செய்கிறார். ஆனாலும்...?

கொஞ்சம் வெளிறி மெலிந்திருக்கிற த்ரிஷா, தமிழ் சினிமாவின் டிபிக்கலான சமய சந்தர்ப்பம் தெரியாமல் ராவடி பண்ணுகிற ஹீரோயின்! விஜய்யின் மரணச் செய்தியின் போதுகூட அம்மணியின் கண்கள் துடிக்கத் தவறுகிறதே?

ஆக்ஷன் டெம்போவை எகிறவைக்கிறது வித்யாசாகரின் இசை. பலானது பாடலின் பீட்டும் டான்ஸும் அதிரடி! சரசர சுறுசுறுவென அடுத்தடுத்து ஆங்கில் மாறி அசரடிக்கும் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் துல்லியம்.

மலேசியாவுக்கு பொருட்களைக் கை மாற்றும் குருவி வைரக் கடத்தல் என்று சின்ன சுவாரஸ்யம் உண்டாக்கியவர்கள், பின்பாதி பழிவாங்கும் ட்ரீட்மென்ட்டில் புதுசாக ஏதுமில்லாமல் கோட்டைவிட்டதில்... ஆவ்வ்வ்!'

நின்றால் ஆக்ஷன், நடந்தால் ஆக்ஷனோ ஆக்ஷன் என்ற திகட்டல் முயற்சிக்கு தியேட்டரில் நெகட்டிவ் ரியாக்ஷன்! சுமன், ஆசிஷ் வித்யார்த்தி, பவன், ஜீவி (கடப்பா ராஜா) என்று படம் நெடுக வில்லன்மேளா

விஜய்க்குத் தோழராக விவேக் உண்டு. கொஞ்சம் கலகலப்போடு சேர்த்து, நேரடியாக அதிரவைக்கிற கெட்ட வார்த்தை காமெடியும் உண்டு!

ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கே ஜஸ்ட் லைக் தட் டேக்கா கொடுத்து வைரம் கடத்தும் விஜய், அதை த்ரிஷாவின் கைப்பைக்குள் இருந்து எடுப்பதற்கு அத்தனையா சிரமப்படுவார்!

அப்பா மணிவண்ணனின் ரத்தம் படிந்த அதே கல்லால் வில்லனை அடிப்பது கம்ப்யூட்டர் பாஸ்வேர்டு தெரிந்த வில்லன் நினைவிழப்பது, க்ளைமாக்ஸில் நல்ல போலீஸ் என்ட்ரி கொடுப்பது, விஜய்யின் சேவையைப் பாராட்டி அவரது கொலைக் குற்றங்களை ஸ்பாட்டிலேயே போலீஸ் அதிகாரி மன்னிப்பது எல்லாம் தமிழ் சினிமா காலம் காலமாகக் கிழித்தெடுத்த கிளிஷேக்கள்!

- விகடன் விமர்சன குழு

No comments: