Sunday, May 04, 2008

குருவி - பட விமர்சனம்

Sunday, 04 May 2008

"கில்லி"- பட வெற்றிக் கூட்டணி தரணி - விஜய், தயாரிப்பு- உதயநிதி ஸ்டாலின்,மேலும் தற்போதைய தென்னிந்திய கனவுக்கன்னி த்ரிஷா, இசை-வித்யாசாகர் என குருவி பட கூட்டணி மிரட்டுகிறது. கில்லியின் வேகத்தை குருவியில் எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம்தான்.

விஜய்-த்ரிஷா காதல்! அப்பா-மகன் செண்டிமெண்ட்! நடுவில் காமெடி !வில்லன்களுடன் சண்டை! இப்போதுள்ள ட்ரெண்ட்படி மாஸ் இமேஜ் வேண்டுமென்பதால் "பஞ்ச் டயலாக்" ! இப்படி சகல விஷயங்களையும் சரி விகிதத்தில் உப்பு,காரம் ,காரம் மசாலா சுவைபட ரசிகனுக்கு அளிக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். ஆனால் அதில் 50% மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறார்.

நடிப்பு :
விஜய்,த்ரிஷா,ஆஷிஷ்வித்யார்த்தி,சுமன்,விவக்,மணிவண்ணன்
இயக்கம் :தரணி
இசை :வியாசாகர்
தயாரிப்பு:உதயநிதி ஸ்டாலின

Image

ஒரே வரியில் சொல்லக்கூடிய கதை தான். வில்லன்கள் ஆஷிஷ் வித்யார்த்தி(தில் வில்லன்) மற்றும் சுமன் (சிவாஜி வில்லன்) ,இவர்களிடம் கொத்தடிமைத் தொழிலாளர்களாக மாட்டிக் கொண்ட மணிவண்ணன் (விஜய் அப்பா) மற்றும் அவர் கூட்டாளிகளை எப்படி காப்பாற்றுகிறார் இளைய தளபதி என்பதுதான் கதை. ஆக்ஷ்ன் மற்றும் காமெடி என சரிவிகத கலவையில் செல்கிறது படம். விஜய் நகைச்சுவையில் பின்னுகிறார். அவருடைய டைமிங் மற்றும் பாணி நன்றாக ஒத்துப்போகிறது.

ஆஷிஷ் வித்யார்த்தியும்,சுமனும் ஆந்திராவிலுள்ள கடப்பாவில் கற்சுரங்க காண்ட்ரேக்டை மணிவண்ணனுக்கு கொடுக்கிறார்கள் .அந்த இடத்தில் தான் விலைமதிக்கமுடியாத வைரம் உள்ளதாம் (அதுவும் ஆப்ரிக்கா அடுத்து இங்கு தான் உள்ளதாம்).ஆனால் அரசாங்கமே நிலநடுக்க ஏரி்யாவென அவ்விடத்தை தடை செய்துவிட்டது. விடுவார்களா வில்லன்கள் !

சட்டத்தை மீறி மணிவண்ணன் மற்றும் அவர் கூட்டாளிகளை கொத்தடிமையாக்கிவிடுகிறார்கள். மணிவண்ணனோ தனது மகன் இவர்களை பழிவாங்குவான் என சூளூரைக்கிறார். ஆனால் இதெல்லாம் தெரியாத ஹீரொ சென்னையில் தனது தந்தை கடன் காரணமாக தலைமறைவாகிவிட்டார் என எண்ணுகிறார். இதற்கிடையில் மணிவண்ணன் வீட்டுக்காக அளித்த 50 லட்ச ரூபாய் செக் திரும்பி விடுகிறது. வீட்டைக் காலி செய்யும் சூழ்நிலையில் ஒரு வாரம் அவகாசம் கேட்டு காசோலையில் உள்ள கையெழுத்தை வைத்து "குருவி"யாக மலேசியாவிற்கு ஜூட்!

"குருவி"-ன்னா சரக்குகளை அங்கும் இங்கும் மாற்றல் செய்யும் ஆள். மலேசியாவில் சுமனுடன் மோதல்.சுமனின் தங்கை த்ரிஷாவிற்கு விஜய் மேல் காதல்! இருந்தாலும் "ஜோரோ" மாதிரி வைரத்தை திருடியவுடன் த்ரிஷாவிற்கு காதல் வருவது கொஞ்சம் ஓவர். சுமனும் த்ரிஷாவும் விஜ்யைத் தேடி சென்னை வருகிறார்கள் . விஜய் எவ்வாறு மணிவண்ணன் மற்றும் அவர் கூட்டாளிகளை எப்படி மீட்கிறார்...விடை வெள்ளித் திரையில்!

Image

தயாரிப்பாளரின் முதல் படம் ! அதனால் படத்தில் வாரிவிட்டிருக்கிறார். பிரம்மாண்டமான செட், கிராபிக்ஸ் என எதிலும் குறைவைக்கவில்லை.

வித்யாசாகரின் பிண்ணணி இசை சில இடங்களில் சொதப்பியிருக்கிறது. ஆனால் பாடல்கள் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைக்கின்றன. "தேன் " பாடலும் அருமை! இசையும் இனிமை,படமாக்கிய இடமும் குளுமை. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறப்பாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இது ஹீரோவின் காலம்! படம் முழுக்க விஜய்! விஜய்!விஜய்! மனிதர் சண்டை,காதல்,ஆட்டம் பாட்டத்திலும் சரி,நகைசுவையிலும் சரி சாதாரணமாக செய்துவிடுகிறார். . விவேக் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை.

த்ரிஷா தமிழ் சினிமா ஹீரோயின் வேலையை கொஞ்சமும் மாற்றாமல் அதாவது ஹீரோவின் மேல் காதல்!அவ்வப்போது டூயட் ,கொஞ்சமென்ன நிறையவே கிளாமர் என செவ்வனே செய்துள்ளார். படம் அவ்வப்போது தொய்வு ஏற்படுவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.

குருவி:மிதமான வேகத்தில் பறக்கிறது.

அதிகாலை ரேட்டிங்: ***

No comments: