Wednesday, April 30, 2008

மே 3ம் தேதி குருவி ரிலீஸ்!

விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.

மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.

படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாகியுள்ளது. மொத்தம் 400 பிரிண்டுகளைப் போடுகின்றனர். புதன்கிழமையன்று படத்தின் டிவிடிக்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்ைதத் தவிர கேரளா, கர்நாடகத்திலும் ஒரே நேரத்தில் குருவி ரிலீஸாகிறது. பெங்களூர் நகரில் மட்டும் 6 தியேட்டர்களில் படத்தைத் திரையிடுகின்றனராம். ஓகனேக்கல் பிரச்சினையைத் தொடர்ந்து கன்னட அமைப்புகள் செய்த ரகளையால் அங்கு தமிழ்ப் படங்களைத் திரையிடுவது சிக்கலாக இருந்தது. சமீபத்தில்தான் அது சரியாகி மறுபடியும் தமிழ்ப் படங்கள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் முதல் முறையாக விஜய் படம் வெளியாவதால், வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேரளா விநியோக உரிமை ரூ.1.5 கோடிக்குப் போயுள்ளது. விஜய் படம் ஒன்றுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அங்கு 48 தியேட்டர்களில் படத்தை வருகிற சனிக்கிழமை ரிலீஸ் செய்கின்றனர்.

இந்த நிலையில் குருவி படத்திற்கு யுஏ சர்ட்டிபிகேட்டை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளதாம். மேலும் படத்தில் இடம் பெற்றிருந்த சில வன்முறைக் காட்சிகளுக்கும் கட் சொல்லியுள்ளனராம்.

பி.கு.: மே 1ம் தேதி அஜீத்திற்குப் பிறந்த நாள். எனவேதான் குருவியை 3ம் தேதிக்கு தூக்கிப் போய் விட்டார்கள் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது!

No comments: